உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 387 இல் இரண்டாம் அர்தசெராக்சால் அறிவிக்கப்பட்ட அரசரின் அமைதி உடன்பாடு, அகாமனிசியப் பேரரசின் உத்தரவாதத்தின் கீழ் கொரிந்தியப் போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது. செனபோன், எலெனிகா. இந்த மொழிபெயர்ப்பில் "சுதந்திரம்" என்ற சொல் பொதுவாக "தன்னாட்சி" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (αὐτονόμους கிரேக்க மூலத்தில்).[1][2]

மன்னரின் அமைதி உடன்பாடு (கிமு 387) என்பது பாரசீக மன்னர் இரண்டாம் அர்தசெராக்சால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அமைதி உடன்பாடாகும். இது பண்டைய கிரேக்கத்தில் கொரிந்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. அகாமனிசிய பாரசீகத்தின் அரசனுடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சூசாவுக்குப் பயணித்த எசுபார்த்தன் தூதர் அண்டால்சிடாசின் பெயரால், இந்த ஒப்பந்தம் அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு (Peace of Antalcidas) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் பழங்காலத்தில் மிகவும் பொதுவாக மன்னரின் அமைதி உடன்பாடு என்று அழைக்கப்பட்டது, இது பாரசீக செல்வாக்கின் ஆழத்தைக் காட்டுகிறது, ஏனெனில் பாரசீகர்கள் கொடுத்த தங்கமே முந்தைய போருக்கு உந்து விசையாக இருந்தது. முதல் பெலோபொன்னேசியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்தத்தைப் போன்றே இந்த ஒப்பந்தமும் ஒரு பொது அமைதி ஒப்பந்தத்தின் ஒரு வடிவமாகும்.

போரின் முடிவு

[தொகு]

கிமு 387 வாக்கில், கொரிந்தியப் போரின் மையமானது கிரேக்க நிலப்பரப்பில் இருந்து ஏஜியன் பகுதிக்கு இடம் மாறியது. அங்கு ஏதெனிய தளபதி திராசிபுலசின் தலைமையின்ல் ஏதெனியன் கடற்படை ஏஜியன் முழுவதும் பல நகரங்களை வெற்றிகரமாக ஏதெனியன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. மேலும் சைப்பிரசு மன்னர் எவகோரசுடன் இணைந்து செயல்பட்டது. சைப்பிரசு மன்னர் எவகோரசு பாரசீகத்திற்கு எதிரியாக இருந்ததாலும், பல ஏதெனிய வெற்றிகள் பாரசீக நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாலும், ஏதென்சின் முன்னேற்றங்களால் கொண்ட கவலையால் அர்தசெர்க்சை ஏதென்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு அளித்துவந்த ஆதரவை எசுபார்த்தாவின் பக்கம் திருப்பக் காரணமாயிற்று. எசுபார்த்தன் கடற்படையின் தளபதியான அண்டால்சிடாசு மற்றும் பாரசீக ஆளுநரான திரிபாசசுடன் சூசாவுக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு, எசுபார்த்தன்களும் பாரசீகர்களும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை உருவாக்கினர்.

அண்டால்சிடாசு அமைதி பேச்சுவார்த்தை நடத்த சூசாவுக்கு சென்ற பாதை.

ஏதெனியர்களை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவைக்க, அண்டால்சிடாசு தனது 90 கப்பல்களை எலஸ்பாண்டிற்கு கொண்டுவந்து நிறுத்தினார். அந்தப் படைகளால் கருங்கடல் பகுதியிலிருந்து ஏதெனியர்கள் தானியங்களை இறக்குமதி செய்யும் வணிகப் பாதைகளை அச்சுறுத்த முனையலாம். கிமு 404 இல், எசுபார்த்தன்கள் எலஸ்பாண்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தபோது, ஏதெனியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பேரழிவுகரமான தோல்வியை மனதில் கொண்டு, பேச்சுவார்த்தைக்கு வர ஒப்புக்கொண்டனர். இதனால் ஏதென்சு இல்லாமல் எசுபார்த்தாவுடன் போராட விரும்பாத தீப்ஸ், கொரிந்து, ஆர்கோஸ் போன்றவையும் பேச்சுவார்த்தைக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டன. எசுபார்த்தாவில் நடந்த ஒரு அமைதி மாநாட்டில், அனைத்து தலைவர்களும் அர்தாசெர்க்சு விதித்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டனர்.

அமைதி உடன்பாட்டின் விதிமுறைகள்

[தொகு]
அண்டால்சிடாசின் அமைதி உடன்பாட்டுக்கு அகாமனசிய மன்னர் இரண்டாம் அர்தசெகசு உத்தரவாதம் அளித்தார்.

அரசரின் அமைதி உடன்பாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதில் பிரதிபலிக்கும் பாரசீக செல்வாக்கு ஆகும். செனபோனால் பதிவு செய்யப்பட்ட அமைதி உடன்பாட்டின் விதிமுறைகளை நிறுவிய பாரசீக ஆணை இதை தெளிவாகக் காட்டுகிறது:

ஆசியாவில் உள்ள கிளாசோமினே போன்ற நகரங்களும், அப்பகுதியில் உள்ள சைப்ரசு போன்ற தீவுகளும் தனக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும், லெம்னோஸ், இம்ப்ரோஸ், ஸ்கைரஸ் தவிர, சிறிய மற்றும் பெரிய மற்ற கிரேக்க நகரங்கள் தன்னாட்சியாக விடப்பட வேண்டும். மேலும் இவை (லெம்னோஸ், இம்ப்ரோஸ், ஸ்கைரஸ்) பழையபடி ஏதெனியர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும், என்று மன்னர் அர்தசெராக்சஸ் நினைக்கிறார். ஆனால் இவ்விரு தரப்பினரில் யார் இந்த அமைதி உடன்பாட்டை ஏற்கவில்லையோ, அவர்கள் மீது நானும் இந்த உடன்பாட்டை விரும்புவோருடன் இணைந்து, தரை வழியாகவும், கடல் வழியாகவும், கப்பல்களாலும் பணத்தாலும் போர் செய்வேன்.[1][2][3]

ஐயோனியா மற்றும் சைப்ரசு போன்றவை பாரசீகர்களுக்கு சொந்தமாக்கபட்டது. மேலும் ஏதெனியர்கள் ஏஜியனில் புதிதாக வென்ற பிரதேசங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மற்ற கிரேக்க அரசுகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. மேலும் தீப்சு தனது போயோடியன் கூட்டணியை கலைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. இந்த அமைதி உடன்பாட்டை கண்காணித்து நடைமுறைப் படுத்தும் பொறுப்பு எசுபார்த்தாவிடம் வழங்கப்பட்டது.

விளைவுகள்

[தொகு]

அமைதி உடன்பாட்டின் மிகப்பெரிய விளைவாக ஐயோனியா மற்றும் ஏஜியன் பகுதிகள் மீது உறுதியான கட்டுப்பாடை பாரசீகம் மீண்டும் பெற்றது. 5 ஆம் நூற்றாண்டில் டெலியன் கூட்டணியால் ஏஜியன் கடற்கரைப் பகுதியிலிருந்து விரட்டப்பட்ட பாரசீகர்கள் பெலோபொன்னேசியப் போரின் பிற்பகுதியிலிருந்து தங்கள் பழைய ஆதிக்கப்பகுதிகளை மீட்டெடுத்தனர். மேலும் அப்போது கிரேக்கத்திற்கு தன் விதிமுறைகளை ஆணையிடும் அளவுக்கு வலுவாகவும் ஆயினர். பேரரசர் அலெக்சாந்தர் காலம் வரை இந்த வலிமையான நிலையை அவர்கள் தக்க வைத்துக் கொண்டனர். [4] [5]

அகாமனசிய தரப்பில் ஆளுநர் திரிபாசோசால் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அமைதியைப் பாதுகாப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் தங்களுக்கு உள்ள பொறுப்பைப் பயன்படுத்தி, எசுபார்த்தன்கள் தங்களுக்கு அரசியல் அச்சுறுத்தல்களாக உணர்ந்த நகர அரசுகளுக்கு எதிராக பல போர்த் தொடர்களைத் தொடங்கினார்கள். [6] கி.மு 382 இல் வடகிழக்கு கிரேக்கத்தில் பெடரலிஸ்ட் கால்சிடியன் கூட்டணியை உடைப்பதற்கான போர்த் தொடர் மிகப்பெரிய தலையீடு ஆகும். இதுபோன்ற பல தலையீடுகளை எசுபார்த்தா மேற்கொண்டது.

கிரேக்கத்தில் அமைதியைக் கொண்டுவருவதில் பாரசீக அரசின் அமைதி உடன்பாடு வெற்றிபெறவில்லை. பெலோபிடாஸ் மற்றும் அவரது தோழர்கள் லாகோனிசிங் கொடுங்கோலர்களைக் கொன்றதன் மூலம் 379 இல் தீப்சை விடுவித்தனர். 382 இல் ஒலிந்தசுக்கு எதிரான போர்த் தொடருக்குப் பிறகு ஏதெனியன் கடற்படை புத்துயிர் பெற்றது. அடுத்த இரண்டு தசாப்தங்களில் அமைதியை மீட்டெடுப்பதற்கான இடைப்பட்ட முயற்சிகளும் தொடர்ந்தன. எசுபார்தாவுக்கு அதிகாரங்களை வழங்கியதால் அதை அது மற்ற அரசுகள் மீது பயன்படுத்தும்போது அவற்றைக் கோபமடையச் செய்வதன. அவை ஒப்பந்தத்தின் அழிவுக்கான விதைகளாக ஆயின. மேலும் கிரேக்ககத்தில் ஒரு நிலையான போர் பதட்டம் தொடர்ந்து இருந்தது.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Ruzicka, Stephen (2012). Trouble in the West: Egypt and the Persian Empire, 525–332 BC (in ஆங்கிலம்). Oxford University Press, USA. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199766628.
  2. 2.0 2.1 Tritle, Lawrence A. (2013). The Greek World in the Fourth Century: From the Fall of the Athenian Empire to the Successors of Alexander (in ஆங்கிலம்). Routledge. p. 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134524747.
  3. Xenophon, Hellenica 5.1.31
  4. Ertl, Alan (2007). The Political Economic Foundation of Democratic Capitalism: From Genesis to Maturation. Boca Raton: Brown Walker. p. 111.
  5. Tucker, Spencer (2010). A Global Chronology of Conflict. Santa Barbara, California: ABC-CLIO LLC. p. 52.
  6. Simon Hornblower, in John Boardman, Jasper Griffin and Oswyn Murray, Greece and the Hellenistic World (Oxford)141.